ஊழியர் தற்கொலை வழக்கில் பெண் நீதிபதி மாற்றம்
திருச்சி:திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாக்கியம் சென்னை நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றியவர் அருண் மாரிமுத்து. இவர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பணிச்சுமை காரணமாக பிப்., 26ல் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நீதிபதி பாக்கியம், அதிக வேலை நெருக்கடி கொடுத்தது தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம், திருச்சி மாவட்ட தலைமை நீதிபதி கிறிஸ்டோபர், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி பாக்கியத்தை, சென்னை நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் செய்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.