கூடலுாரில் மனித -- -விலங்கு மோதல் இல்லாத சூழல் வன அலுவலர் நம்பிக்கை

கூடலுார், ;''கூடலுாரில் மனித- விலங்கு மோதல் இல்லாத சூழல் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,'' என, டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.
கூடலுார் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில், மனித- வனவிலங்கு மோதலை தடுக்கும் நடவடிக்கை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வனச்சரகர் அய்யனார் வரவேற்றார்.
கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து பேசுகையில், ''கூடலுார் வன கோட்டத்தில், வன விலங்குகள் தாக்கி, 2022--23ல் 10 பேர்; 2023 -24ல் 11 பேர், உயிரிழந்துள்ளனர். 2024-25ல் ஐந்து பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதற்கு களப்பணியாளர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது.
கண்காணிப்பு பணியில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மனித- -வனவிலங்கு மோதலை தவிர்த்து, ஒரு உயிர் இழப்பு கூட இல்லை என்ற நிலையை ஏற்படும் நம்பிக்கை உள்ளது. வனத்துறை, வன விலங்கு, மனித உயிர்கள இரண்டு உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பணியாற்றி வருகிறோம்,'' என்றார்.
ஊட்டி அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசுகையில்,''யானையினால், இறப்பு ஏற்பட்டால், அதற்காக கொடுக்கப்படும் நிவாரணத் தொகை உதவி என்றாலும், அந்த குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பை யாரும் ஈடு செய்ய முடியாது. இதற்கு உயிரிழப்புகளை தடுப்பதே தீர்வாகும். அதில், வன ஊழியர்கள் பங்கு மகத்தானது. இதற்கு பயிற்சி முகாம் பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்,''என்றார்.
முகாமில், உதவி வனப் பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், சஞ்சீவ், ரவி, இலியாஸ்மீரான், வன ஊழியர்கள் பங்கேற்றனர். வனச்சரகர் வீரமணி நன்றி கூறினார்.