சாலையில் உலா வரும் யானைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பந்தலுார், ஏப். 26-

பந்தலுார் சுற்று வட்டார பகுதி சாலைகளில், உலா வரும் யானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், பாதுகாப்பாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பந்தலுார் சுற்று வட்டார வனப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உலா வருகின்றன. அதில், கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் யானை, அய்யன்கொல்லி சுற்று வட்டார பகுதிகளில், உலா வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் நிலையில் இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை.

இதேபோல், பிதர்காடு, முக்கட்டி சுற்று வட்டார பகுதிகளில் மற்றொரு காட்டு யானை தனியாக உலா வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் ஓய்வு எடுக்கும் இந்த யானை, இரவு ஒன்பது மணிக்கு மேல் சாலைகளில் உலா வருவது, தோட்டங்களுக்கு சென்று உணவு பொருட்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் மனிதர்களை பார்த்தால் ஒதுங்கி செல்லும் இந்த யானையும் மனிதர்களை தாக்கியது இல்லை.

வனத்துறையினர் கூறுகையில், 'யானைகளின் குணம் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று தெரியாது. இதனால், இந்த யானைகளை பார்த்தால் தாக்காது என்ற எண்ணத்தில், யானைகள் அருகே செல்வது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடகூடாது. கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement