போதை பொருள் கடத்தல் வழக்கு 8 மாதங்களில் 2,774 பேர் கைது
சென்னை,
சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில், கமிஷனர் அருண் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவை துவக்கினார். இப்பிரிவில், உதவி கமிஷனர், இரண்டு காவல் ஆய்வாளர்கள், ஐந்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 போலீசார் உள்ளனர்.
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துவங்கியதன் விளைவாக, கடந்த எட்டு மாதங்களில் போதைப் பொருள் சம்பந்தமாக, 1,044 வழக்குகள் பதிவு செய்து, 22 வெளிநாட்டவர்கள் உட்பட, 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 21.90 கிலோ மெத் ஆம்பெட்டமைன், 1.60 கிலோ மெத்தகுலோன், 39.10 கிலோ கேட்டமைன், 213 கிராம் ஹெராயின், 67.14 கிராம் கோகைன், 1,215 கிலோ கஞ்சா, 51,229 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 90 மொபைல் போன்கள், 12 இருசக்கர வாகனங்கள், எட்டு நான்கு சக்கர வாகனங்கள், 51 லட்சம் ரூபாய், மடிக்கணினி, 63.60 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 300 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு 52 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.