இதே நாளில் அன்று

ஏப்ரல் 27, 1989
சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாரில், நாகப்ப பிள்ளை - தங்கம்மாள் தம்பதியின் மகனாக, 1915, பிப்ரவரி 22ல் பிறந்தவர் ஆறுமுகம் பிள்ளை.
இவர், தன் 14வது வயதில், சகோதரருடன் மலேஷியா சென்றார். அங்கு மளிகை கடையில் வேலை செய்து, பின் வணிகத்தில் ஈடுபட்டார். மலேஷியா சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டிஷாரின் ரப்பர் தோட்டங்களை வாங்கி, சிறு முதலாளிகளுக்கு விற்று செல்வந்தர் ஆனார்.
இவரது, 11.5 ஏக்கர் ரப்பர் தோட்டத்தில், 3,000 இந்தியர்கள் பணியாற்றினர். அங்கு, 11 இடங்களில் இருந்த தமிழர்களின் குழந்தைகளுக்காக, தமிழ் பள்ளிகளை திறந்ததுடன், விளையாட்டு போட்டிகள் வாயிலாக அவர்களை ஒருங்கிணைத்தார்.
அங்கு, 'தமிழ் மலர்' என்ற நாளிதழையும், 'சமநீதி' என்ற வார இதழையும் நடத்திய இவர், திருப்பத்துாரில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரியை துவக்கி, அப்பகுதி மாணவர்களுக்கு கல்வி வழங்கினார். மலேஷியாவில் கோவில்கள் கட்டவும், புனரமைக்கவும் தாராளமாக நிதி வழங்கிய இவர், தன், 74வது வயதில், 1989ல் இதே நாளில் மறைந்தார்.
மலேஷிய அரசின், 'டத்தோ' விருது பெற்ற தமிழர் மறைந்த தினம் இன்று!