அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.17,400 கோடி முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.17,400 கோடி முதலீடு




கடந்த வாரம் அன்னிய முதலீட்டாளர்கள் 17,425 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.டி.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையிலும், அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாகவே இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்து வரும் நிலையில், இம்மாதத்துக்கான நிகர முதலீடு மைனஸ் நிலையிலேயே உள்ளது. அதாவது வாங்கியதைக் காட்டிலும் விற்பனை செய்ததே அதிகமாக உள்ளது.



ஊக்குவிப்பு சலுகை திட்டத்தில் பயன்பெற வடிவமைப்பு குழு தேவை




மத்திய அரசின் மின்னணு உதிரி பாக தயாரிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள், வடிவமைப்பு குழுவை அமைக்க வேண்டும் என மத்திய மின்னணுவியல் துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான போர்ட்டலை வெளியிட்டு பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வடிவமைப்பு குழு அமைப்பது கட்டாயம் கிடையாது என்றாலும், இந்த நடைமுறையை பின்பற்றாத நிறுவனங்கள் தேர்வு செய்யப்படாது என அவர் கூறினார். எனவே, அனைத்து நிறுவனங்களும் வடிவமைப்பு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், தரமான பொருட்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement