பெண் நிர்வாகியிடம் அத்துமீறல்; மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி., கட்சியில் இருந்து நீக்கம்

கோல்கட்டா: சக பெண் நிர்வாகியிடம் அநாகரீகமாக வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி., பன்சா கோபால் சவுத்ரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
முர்ஷிதாபாத் மாவட்டம் ஜியதகாஞ்ச் அசிம்கஞ்ச் நகராட்சியில் முன்னாள் கவுன்சிலரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் கடந்த ஏப்.,20ம் தேதி சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். தங்கள் கட்சியின் மூத்த தலைவரும், 3 முறை லோக்சபா எம்.பி.,யான பன்சா கோபால் சவுத்ரி, தனக்கு ஆபாசமாக வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதாக குற்றம்சாட்டினார். மேலும், இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளையும் அவர் பகிர்ந்திருந்தார். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடம் தான் அந்தப் பெண் புகார் அளித்ததாகவும், இது தொடர்பான விசாரணையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பன்சா கோபால் சவுத்ரி மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனக்கெதிராக திட்டமிட்ட சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில் தான் கோபால் சவுத்ரிக்கு எதிரான ஆதாரங்களை அவர் பொது வெளியில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், பன்சா கோபால் சவுத்ரியை கட்சியில் இருந்து நீக்குவதாக மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஆனால், கட்சியில் இருந்து நீக்குவதற்கான காரணத்தை எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடவில்லை.