பாக்., செல்ல முயன்ற இந்தியப் பெண்: அட்டாரி - வாகா எல்லையில் தடுத்து நிறுத்தம்

வாகா: அட்டாரி - வாகா எல்லையில், பாகிஸ்தான் செல்ல முயன்ற இந்தியப் பெண்ணை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
உ.பி.,யின் மீரட் நகரைச் சேர்ந்தவர் சனா(30). இவர் கடந்த 2020ம் ஆண்டு கராச்சியை சேர்ந்த பிலால் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மற்றும் ஒரு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் சொந்த ஊருக்கு குழந்தைகளுடன் சமீபத்தில் வந்தார்.
இச்சூழ்நிலையில் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா வந்துள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டது. சனாவையும் குழந்தைகளுடன் வெளியேறும்படி மீரட் நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதன்படி பாகிஸ்தான் செல்வதற்காக குழந்தைகளுடன் சனா பாகிஸ்தான் செல்வதற்காக அட்டாரி - வாகா எல்லை வந்தார். ஆனால், சனாவிடம் இந்திய பாஸ்போர்ட் உள்ளதால், பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுத்த அதிகாரிகள், மீரட் நகருக்கே செல்லும்படி அறிவுறுத்தினர்.அதேநேரத்தில் குழந்தைகளிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்ததால், அவர்கள் அந்நாட்டிற்கே செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனால், கவலையிடைந்த சனா, அதிகாரிகள் முன்னிலையில் கண்ணீர் வடித்தார். இதேபோன்று பலர், எல்லையில் இருப்பதை பார்த்த சனாவும் அவருடன் வந்த குடும்பத்தினரும், தாயார்கள் இந்தியாவில் தங்கியிருக்க, குழந்தைகள் மட்டும் பாகிஸ்தான் செல்வதை பார்த்தனர். தொடர்ந்து அவர்கள், அதிகாரிகளிடம் தங்களது நிலைமையை விளக்கினர். குழந்தைகளுக்கு 3, 1 வயது மட்டும் ஆவதால், தனியாக வாழ முடியாது என்றனர். ஆனால், சனாவை மீரட்நகருக்கு செல்ல அறிவுறுத்திய அதிகாரிகள், அரசு புது உத்தரவு பிறப்பிக்கும் வரை காத்திருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சனா கூறியதாவது: எனது குழந்தைகள் இங்கு தங்கியிருக்க முடியாது. நானும் பாகிஸ்தான் செல்ல முடியாது. எங்களை வரவேற்க கணவர் எல்லை வந்தார். ஆனால் முடியவில்லை. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும், குழந்தைகளுடன் பாகிஸ்தான் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.









