தஞ்சை தீ விபத்தில் 41 பேருக்கு மூச்சுத்திணறல்; பாதிப்பை மறைப்பதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில், ஏப்., 24ம் தேதி, மகப்பேறு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு பணியில் இருந்த ஒப்பந்த பணியாளர்களான பாதுகாவலர்கள், உதவியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவியர் என, பலரும் அசுர வேகத்தில் செயல்பட்டு, தங்கள் உயிரை பணயம் வைத்து, பெண்கள், குழந்தைகளை உடனடியாக வேறு கட்டடத்துக்கு மாற்றினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கலெக்டர் பாராட்டு
அப்போது ஆய்வுக்கு வந்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தீ விபத்தின் போது துரிதமாக செயல்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பாராட்டி, மூச்சுத் திணறலால் இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், இந்த தீ விபத்தில் ஒப்பந்த பணியாளர்கள் 41 பேருக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு, தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. டாக்டர்கள் அவர்களை கேவலமாக பேசுவதாக உறவினர்கள், பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோர் கூறியதாவது:
தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் முழுதும் புகை சூழ்ந்தது. எங்கள் உயிரை பொருட்படுத்தாமல், அனைவரையும் காப்பாற்றினோம். அப்போது, புகையால் எங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்.
'நாங்கள் சிகிச்சைக்காக சேரவில்லை, அரசிடமிருந்து ஏதாவது பணம் கிடைக்கும் என சிகிச்சையில் படுத்து இருக்கிறோம்' என, எங்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசுகின்றனர்.
கலெக்டரும் இருவர் மட்டும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், 41 பேர் சிகிச்சையில் இருப்பதை, மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் மறைத்து விட்டது.
இவ்வாறு தெரிவித்தனர்.
அவசரமாக டிஸ்சார்ஜ்
தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம் கூறுகையில், ''தீ விபத்தில் 41 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
''அவர்களுக்கு புகையின் தாக்கம் அதிகமாக உள்ளதா என, நுரையீரலில் பரிசோதனை செய்துள்ளோம். பரிசோதனை முடிவுகள் வந்த பின் அனைவரும் வீடு திரும்பலாம். சிகிச்சை தேவைப்பட்டால் அளிக்கப்படும்,'' என்றார்.
இதற்கிடையே, பரிசோதனை முடிவு, சிகிச்சை நிலை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காமல், 41 பேரையும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் அவசர கதியில் டிஸ்சார்ஜ் செய்தது. இதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பணியாளர்களுடன் தாசில்தார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும்
-
திருமணமாகாத விரக்தி; தொழிலாளி தற்கொலை
-
அம்மாபேட்டையில் டோல்கேட் அமைக்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
-
பாவை கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தின விழா
-
இறைச்சி விற்பனை பாதிப்பு
-
பேனர் வைத்தவர் மீது வழக்கு
-
செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா; வரும் 2ல் 'காட்டேரி வேடம்' தரித்தல்