மும்பை அணிக்கு 5வது வெற்றி: சூர்யகுமார், பும்ரா அபாரம்

மும்பை: சூர்யகுமார் (54 ரன்), பும்ரா (4 விக்.,) கைகொடுக்க, மும்பை அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, லக்னோ மோதின.
மயங்க் வாய்ப்பு: லக்னோ அணியில் ஷர்துல் தாகூருக்கு பதில், காயத்தில் இருந்து மீண்ட 'வேகப்புயல்' மயங்க் யாதவ் இடம் பெற்றார். மும்பை அணியில் சான்ட்னர், விக்னேஷ் நீக்கப்பட, கரண் சர்மா, கார்பின் பாஷ் (அறிமுகம்) வாய்ப்பு பெற்றனர். 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
'ராக்கெட்' ரிக்கிள்டன்: மும்பை அணிக்கு ரிக்கிள்டன் 'ராக்கெட்' வேக துவக்கம் தந்தார். பிரின்ஸ் யாதவ் ஓவரில் 14 ரன் (6, 4, 4) விளாசினார். மறுபக்கம் மயங்க் ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் அடித்தார் ரோகித். இன்னொரு சிக்சருக்கு ஆசைப்பட்ட ரோகித் (12) வீணாக அவுட்டானார். பின் வில் ஜாக்ஸ், ரிக்கிள்டன் சேர்ந்து அசத்தினர். 2வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தனர். 25 பந்தில் அரைசதம் எட்டிய ரிக்கிள்டன் (58), திக்வேஷ் ரதி 'சுழலில்' சிக்கினார். ஜாக்ஸ், 29 ரன் எடுத்தார்.
27 பந்தில் அரைசதம்: 'மிஸ்டர் 360 டிகிரி' வீரரான சூர்யகுமார் வழக்கம் போல வாணவேடிக்கை காட்டினார். பிஷ்னோய் ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். திலக் வர்மா (6), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (5) நிலைக்கவில்லை. அவேஷ் கான் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சூர்யகுமார், 27 பந்தில் அரைசதம் கடந்தார். அடுத்த பந்தில் 54 ரன்னுக்கு (4x4, 4x6) அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் மிரட்டிய நமன் திர், கார்பின் பாஷ், 200 ரன்னை கடக்க உதவினர். கார்பின் 10 பந்தில் 20 ரன் (2x4, 1x6) எடுத்தார். அவேஷ் கான் வீசிய கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பினார் நமன் திர். மும்பை அணி 20 ஓவரில் 215/7 ரன் குவித்தது. நமன் திர் (11 பந்தில் 25 ரன், 2x4, 2x6), தீபக் சகார் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
வில் ஜாக்ஸ் ஜோர்: கடின இலக்கை விரட்டிய லக்னோ அணி, மும்பை பந்துவீச்சில் சிதறியது. பும்ரா 'வேகத்தில்' மார்க்ரம் (9) வெளியேறினார். தீபக் சகார் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார் நிகோலஸ் பூரன். 7வது ஓவரை வீசிய 'ஸ்பின்னர்' வில் ஜாக்ஸ் இரட்டை 'அடி' கொடுத்தார். முதல் பந்தில் 'ஆபத்தான' பூரனை (27) அவுட்டாக்கினார். 3வது பந்தில், ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட 'காஸ்ட்லி' கேப்டன் ரிஷாப் பன்ட்டை (4) வெளியேற்றினார். லக்னோ அணி 7 ஓவரில் 67/3 ரன் எடுத்து தவித்தது. பவுல்ட் பந்தில் மிட்சல் மார்ஷ் (34) நடையை கட்டினார். படோனி, 35 ரன் எடுத்தார்.
நழுவிய 'ஹாட்ரிக்': பும்ரா ஓவரின் (16வது) 2வது பந்தில் மில்லர் (24) வீழ்ந்தார். 5, 6வது பந்தில் வரிசையாக அப்துல் சமத் (2), அவேஷ் கான் (0) அவுட்டாகினர். பும்ராவின் அடுத்த ஓவரின் முதல் பந்தை பிரின்ஸ் யாதவ் தடுத்து ஆட, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. பிஷ்னோய் (13) ஆறுதல் தந்தார். லக்னோ அணி 20 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
'ஆல்-ரவுண்டராக' ஜொலித்த மும்பை அணியின் வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'அனைவருக்கும் கல்வி, விளையாட்டு' திட்டத்தில் பயன் பெறும் 20,000 பள்ளி சிறுவர், சிறுமியர் நேற்றைய போட்டியை நேரில் கண்டு களித்தனர். மும்பை, வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த இவர்கள், நீல நிற உடை அணிந்து, மும்பை வெற்றியை கொண்டாடினர்.
4000 ரன்
நேற்று மும்பை வீரர் சூர்யகுமார், பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 4,000 ரன் (2714 பந்து) எட்டிய மூன்றாவது வீரரானார். முதல் இரு இடங்களில் கெய்ல் (2653), டிவிலியர்ஸ் (2658) உள்ளனர்.
* இம்முறை 3வது அரைசதம் அடித்த சூர்யகுமார், அதிக ரன் எடுத்தவருக்கான 'ஆரஞ்ச்' தொப்பியை பெற்றார். இதுவரை 10 போட்டிகளில் 427 ரன் (சராசரி 61.00, ஸ்டிரைக் ரேட் 169.44) எடுத்து உள்ளார்.
* பிரிமியர் அரங்கில் 150 சிக்சர் (160 போட்டி) எட்டினார் சூர்யகுமார்.
* பிரிமியர் அரங்கில் தொடர்ந்து 25 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தை உத்தப்பாவுடன் (2014, கோல்கட்டா) பகிர்ந்து கொண்டார் சூர்யகுமார் (2025). இருவரும் 10 முறை எட்டியுள்ளனர். இம்முறை சூர்யகுமார் 54, 40, 68, 26, 40, 28, 67, 27, 48, 29 என ரன் மழை பொழிந்துள்ளார்.
முதல் முறை
பிரிமியர் லீக் சுற்றில் லக்னோவுக்கு எதிராக முதல் வெற்றியை மும்பை பெற்றது. இம்முறை தொடர்ந்து 5வது வெற்றியை வசப்படுத்தியது.
174 விக்கெட்
மும்பை சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவரானார் பும்ரா. 139 போட்டியில் 174 விக்கெட் கைப்பற்றியுள்ளார். மலிங்காவை (122 போட்டி, 170 விக்கெட்) முந்தினார்.