தங்க பத்திர முதலீடு 109 சதவிகிதம் லாபம்

மும்பை:ரிசர்வ் வங்கியால் கடந்த 2020 -- 21ம் நிதியாண்டில், வெளியிடப்பட்ட முதல்கட்ட தங்கப்பத்திர கணக்கை முன்கூட்டியே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்ட ஆண்டில் இருந்து, பொதுவாக எட்டு ஆண்டுகளில் முதிர்வடையும். எனினும், ஐந்து ஆண்டு களுக்கு பிறகு முதலீட்டை திரும்ப பெற அனுமதிக்கப்படும். கடந்த 2020ம் ஆண்டு ஏப்., 28ம் தேதி முதல்கட்ட தங்கப்பத்திரம் வெளியிடப்பட்டது.
இதை ஐந்து ஆண்டுகளில் முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த ஏப்., 23, 24 மற்றும் 25ம் தேதி விலை அடிப்படையில், கிராமுக்கு 9,600 ரூபாய் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. தங்கப்பத்திரம் வெளியிடப்பட்ட போது யூனிட் விலை 4,589 ரூபாயாக இருந்தது.
தற்போது நிர்ணயித்த 9,600 ரூபாயோடு ஒப்பிடுகையில், கிராம் ஒன்றுக்கு 5,011 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. இது, 109 சதவீதம் அதிகமாகும்.
முன்னதாக, இந்த வாரத்தின் துவக்கத்தில், 2017 -- 18ம் ஆண்டுக்கான நான்காம் கட்ட தங்கப் பத்திரம், 2018- - 19ம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகள் முன்கூட்டியே முடிக்க தகுதி பெற்றவை என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.