குர்ணால், கோஹ்லி அரைசதம்; டில்லியை வீழ்த்தியது பெங்களூரு அணி

பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: குர்ணால், கோலி அரைசதம் விளாசல்
புதுடில்லி: குர்ணால், கோலி அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.


டில்லி அணிக்கு அபிஷேக் போரெல் (28), டுபிளசி (22) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கருண் நாயர் (4) ஏமாற்றினார். கேப்டன் அக்சர் படேல் (15) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ராகுல் (41) ஆறுதல் தந்தார். புவனேஷ்வர் குமார் 'வேகத்தில்' அஷுதோஷ் சர்மா (2) வெளியேறினார். ஹேசல்வுட் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், யாஷ் தயாள் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். விப்ராஜ் நிகம் (12) 'ரன்-அவுட்' ஆனார். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் ஸ்டப்ஸ் (34) அவுட்டானார்.
டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்தது.


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பெத்தேல் (12), தேவ்தத் படிக்கல் (0), கேப்டன் ரஜத் படிதர் (2) ஏமாற்றினர். பெங்களூரு அணி 26 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. பின் இணந்த விராத் கோலி, குர்ணால் பாண்ட்யா ஜோடி கைகொடுத்தது. துஷ்மந்தா சமீரா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் பந்தில் சிக்சர் விளாசிய குர்ணால், அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 38 பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய கோலி, 45 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த போது துஷ்மந்தா சமீரா பந்தில் கோலி (51) அவுட்டானார். முகேஷ் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய டிம் டேவிட் வெற்றியை உறுதி செய்தார்.


பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குர்ணால் (73 ரன், 4 சிக்சர், 5 பவுண்டரி), டிம் டேவிட் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement