மாடு மேய்த்த முதியவரை மிதித்து கொன்ற யானைகள்
அஞ்செட்டி : வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற முதியவர், யானைகள் தாக்கியதில் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த ஜேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மதலைமுத்து, 65. நேற்று முன்தினம் காலை, ஆடு, மாடுகளை, மேய்ச்சலுக்காக சின்னமலை காப்புக்காட்டிற்கு ஓட்டி சென்றார். மாலையில், ஒரு மாடு மட்டும் வீடு திரும்பிய நிலையில், மற்ற ஆடு, மாடுகளுடன் மதலைமுத்து வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நேற்று காலை வனத்துக்குள் சென்று பார்த்தபோது, வலது கால் துண்டாகி, உடல் சிதைந்து மதலைமுத்து இறந்து கிடந்தார். ஆடு, மாடுகள் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. வனத்துறை ஆய்வில் யானை கூட்டம் தாக்கி கொன்றது தெரிந்தது.
அஞ்செட்டி போலீசார் மற்றும் வனத்துறையினர், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான மதலைமுத்து குடும்பத்துக்கு, வனத்துறையால் இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.