அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்

2

சென்னை; சென்னை அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.



சட்டசபையில் இன்று அவர் பேசியதாவது;


எதிர்க்கட்சித் தலைவர் அண்ணா பல்கலைக்கழக பிரச்னை பற்றி இங்கே பேசி இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொறுத்தமட்டில், உடனடியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுத்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.


குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்திலே அடைக்கப்பட்டு, ஏற்கனவே நான் இந்த அவையில் உறுதி அளித்தது போல, உயர் நீதிமன்ற மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துவிட்டது.


இந்த புகார் மீது காவல்துறை விரைவாக, நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை உயர் நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. எந்த பாலியல் புகாராக இருந்தாலும் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது தான் இந்த அரசு.


சார் என்றெல்லாம் கதை விட்டீங்கள்? ஆனால் இந்த கதை எப்படி கற்பனை ஆனது என்பது உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவே குற்றப்பத்திரிகையில் தெளிவுப்படுத்தி இருக்கிறது. அதை எதிர்க்கட்சித் தலைவரிடம் கொடுக்க முடியாது.


அதுமட்டும் இன்றி, உயர்நீதிமன்றமே பாராட்டி உள்ள நடவடிக்கையை இன்னும் கொச்சைப்படுத்திக் கொண்டு இருந்தால், கடந்த காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்படி குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டார்கள், அ.தி.மு.க., என்பதற்காக புகாரில் நடவடிக்கை எடுக்க எப்படி எல்லாம் தாமதம் செய்தீர்கள், மீண்டும் நான் பட்டியலிட வேண்டியது இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி சொன்னீர்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து, நான் சொல்லணும்னா... இந்த அரசை பொறுத்த மட்டில் எந்த குற்றம் நடந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


இதுகுறித்து சில தகவல்களையும், புள்ளி விவரங்களையும் இந்த அவையிலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தேசிய சராசரி 66.4 விழுக்காடு என்றால் தமிழகத்தில் இந்த குற்றங்கள் 24 விழுக்காடு தான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடக்கிற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.


பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் தேசிய சராசரி 4.7 விழுக்காடு என்றால் தமிழகம் தான் ஒரு லட்சம் பேருக்கு 1.1 என்ற அளவிலே நாட்டிலே குறைவான குற்றம் நடக்கிற மாநிலமாக இருக்கிறது.


பெண்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தேசிய சராசரி 75.5 விழுக்காடு. தமிழகத்தில் இந்த சராசரி 90. 6 விழுக்காடு.


2004ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை 2வது இடம் பிடித்திருக்கிறது. எல்லாத்தையும் விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தமிழகம் தான் இந்தியாவிலேயே மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.


அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் சம்பவம் பெண்கள் பாதுகாப்பில் ஒரு கரும்புள்ளி. ஆனால் தி.மு.க., ஆட்சியில் பெண்களை பாதுகாக்க உறுதி செய்வதற்கான அனைத்து, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான் பணிக்குச் செல்லக்கூடிய பெண்கள் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement