டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் இரண்டாம் சோதனை ஓட்டம் வெற்றி

4

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் இரண்டாம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.


இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது


கடந்த மாதம், பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

முதற்கட்ட சோதனையில் 25 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகபட்சமாக 45 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 10 கி.மீ வரை இரண்டாம் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது.


“படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்” என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


“இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வழித்தட சோதனை மெட்ரோ இரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம்” என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

Advertisement