தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி

9


புதுடில்லி : பத்திரிகை மற்றும் கல்வித் துறையில் சிறப்பான சேவை ஆற்றியதற்காக தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் ஜனாதிபதி இன்று (ஏப்-28) விருதுகளை வழங்கினார்.


Latest Tamil News

பத்திரிகை துறை மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

பத்திரிகை தொடர்பான பல்வேறு தேசிய அமைப்புகளில், உயர் பதவி வகித்துள்ள லட்சுமிபதி, மதுரையில் கல்வி நிலையங்களை துவங்கி, கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்க உதவினார்.
மருத்துவம் தொடர்பான, தி ஆன்டிசெப்டிக் மற்றும், ஹெல்த் கடல் சார்ந்த சாகர் சந்தேஷ் (இ - பேப்பர்) ஆகிய பத்திரிகைகளையும் நடத்தி வரும் லட்சுமிபதி, பத்திரிகை துறையிலும், கல்வி துறையிலும் ஆற்றிவரும் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வாழ்க்கை வரலாறு

தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூன்றாவது மகன் ஆர்.லட்சுமிபதி; 1935ல் பிறந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (வேதியியல்) பட்டம் பெற்ற பின், பிரிட்டனில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்தித்தாள் மேலாண்மை பயின்றார்.கடந்த 1956ல் தினமலர் நாளிதழில் பொறுப்பு ஏற்றார். துவக்கத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றினார். இதழியல் அனுபவம், மேலாண்மை திறனால், அதிக விற்பனையாகும் நாளிதழாக தினமலர் நாளிதழை உயர்த்தினார்.


பி.டி.ஐ., செய்தி நிறுவனம், இந்திய நாளிதழ் சங்கமான ஐ.என்.எஸ்., இந்திய மொழி நாளிதழ் கூட்டமைப்பான, ஐ.எல்.என்.ஏ., மற்றும் நாளிதழ் விற்பனை தணிக்கை அமைப்பான, ஏ.பி.சி., ஆகியவற்றின் தலைவர் பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினராகவும் இருந்தார்.

சுப்புலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளையை நிறுவி, எஸ்.எல்.சி.எஸ்., அறிவியல் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., பள்ளி, ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரி போன்றவற்றை துவக்கினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் லட்சுமிபதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் கவர்னரின் பிரதிநிதியாக பணியாற்றினார்.


விருதின் விபரம்
இந்தியாவின் நான்காவது உயரிய விருது பத்ம ஸ்ரீ; 1954ல் துவங்கப்பட்டது. கல்வி, வணிகம், கலை, மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைகளை பத்ம விருது கமிட்டி பரிசீலித்து, பிரதமர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்படுவது வழக்கம்.



இன்று விருது பெற்றவர்கள் விவரம்:

பத்மவிபூஷண் விருது பெற்றவர்கள் பட்டியல்:

எம்.டி.வாசுதேவன் நாயர்
நாகேஷ்வர் ரெட்டி
லஷ்மி நாராயண சுப்பிரமணியன்
ஒசாமு சுசூகி


பத்மபூஷண் விருது பெற்றவர்கள் பட்டியல்:



நந்தமூரி பாலகிருஷ்ணா,
வினோத்குமார் தாம்
சுஷில் குமார் மோடி
சேகர் கபூர்
அஜித்குமார்
பங்கஜ் பட்டேல்
ஜோஸ் சாக்கோ பெரியபுரம்


பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் பட்டியல்:


டாக்டர் ஆர்.லட்சுமிபதி
ஓமனகுட்டி அம்மா
மிரியாலா அப்பாராவ்
ரவிச்சந்திரன் அஸ்வின்
ஜொய்னாசரண் பதாரி
பேகம் பதுால்
அருந்ததி பட்டாச்சார்யா
அனில் குமார் போரோ
புஜங்ராவ் சித்தம்பள்ளி
பேரு சிங் சவுகான்
தாமோதரன்
ஷீன் காப் நிஜாம்
கோகுல் சந்திர தாஸ்
நிர்மலா தேவி
ஹிருதய் நாராயணன் தீக்சித்
கணேஷ்வர் சாஸ்திரி திராவிட்
அத்வைத் சரண்
பவன்குமார் கோயங்கா
ஷாலினி தேவி
வாசுதேவ தாராநாத் காமத்
ஜஸ்பிந்தர் நருலா கவுல்
ஸ்டீபன் நாப்
லாமா லாப்சங்
அசோக்குமார் மகாபத்ரா
ரோணு மஜூம்தார்
தேஜேந்திர நாராயண்
ஹசன் ரகு

Advertisement