பொய் பரப்பிய பாக்., யு டியூப் சேனல்கள்... முடக்கம்! மத்திய அரசு எடுத்த அடுத்த அதிரடி

புதுடில்லி: நம் நாட்டுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் வெறுப்பை துாண்டும் வகையில் பொய் தகவல்களை பரப்பியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த, 16 முக்கிய 'யு டியூப்' சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, துாதரக உறவு துண்டிப்பு, விசா நிராகரிப்பு, நாட்டை விட்டு வெளியேற உத்தரவு என, பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக பாகிஸ்தானைச் சேர்ந்த, 16 முக்கிய யு டியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் பெரும்பாலானவை, பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி பத்திரிகைகள், ஊடகங்களுக்கு சொந்தமானவை.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரின் யு டியூப் சேனல் உட்பட விளையாட்டு தொடர்பான சேனல்களும் இதில் அடங்கும்.

உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'நம் நாடு, ராணுவம், பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக பல பொய்யான, திரித்து கூறப்பட்ட கருத்துகளையும் மற்றும் தவறாக வழிநடத்தும் வகையிலான தகவல்களையும் இந்த சேனல்கள் வெளியிட்டுள்ளன.

'மேலும், மத ரீதியிலும், மக்களை துாண்டும் வகையிலும் பொய் தகவல்களை பரப்பியதால், இந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'டான் நியூஸ், ஏ.ஆர்.ஒய்., நியூஸ், போல் நியூஸ், ஜியோ நியூஸ்' உள்ளிட்ட யு டியூப் சேனல்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.



பி.பி.சி.,க்கு கண்டனம்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், பி.பி.சி.,யில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.பி.சி.,யின் இந்தியப் பிரிவு தலைவர் ஜேக்கி மார்ட்டினுக்கு, மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.ஒரு கட்டுரையில், 'காஷ்மீரில் சுற்றுலா பயணியர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியருக்கான விசாவை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது' என, கூறப்பட்டுள்ளது. இது, இந்தியாவே தாக்குதல் நடத்தியதுபோல உள்ளதாக, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மற்றொரு கட்டுரையில், பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளிகள் என்று குறிப்பிட்டுள்ளது.இதற்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.பி.சி.,யை தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement