மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
சென்னை: மாநிலம் முழுதும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த, நீதிபதி நந்தினி தேவி உட்பட, மாவட்ட நீதிபதிகள் 77 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி இளவழகன், கரூர் மாவட்டத்துக்கும், சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில்வேலவன், சேலத்துக்கும், சென்னை போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமநாதன், கடலுார் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து, மே 13ம் தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்துள்ள, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் உட்பட 77 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ளார்.
நீதிபதி நந்தினி தேவி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அறிவித்த தேதியில் தீர்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடைமுறைப்படி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி, இடமாற்றம் செய்யப்பட்டால், அவர் தீர்ப்பை எழுதிக் கையெழுத்திட்டு சென்றால், அந்த தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி அறிவிக்கலாம்.
அவ்வாறு தீர்ப்பு எழுதப்படவில்லை என்றால், புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி, மீண்டும் அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு, தீர்ப்பை அறிவிக்கலாம் என, நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.