இலங்கை சிறையிலுள்ள 69 மீனவர்களும் 61 படகுகளுடன் விடுவிக்கப்படுவார்களா

ராமநாதபுரம்: பிரதமர் மோடி இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை எதிரொலியாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 69 மீனவர்கள் 61 படகுகளுடன் விடுவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடம் எழுந்துள்ளது.

தமிழகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டியதாக தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கை அரசும் தற்போது கடும் கட்டுப்பாடுகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்கி வருகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு பிரதமர் மோடி ஏப்., 4 ல் மூன்று நாள் பயணம் செய்து அந்நாட்டு அதிபர் அனுர திசநாயகேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டது. மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் எனவும் அப்போது அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள 69 மீனவர்கள், 61 படகுகளை இலங்கை அரசு விடுவிக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மீனவர்கள் உள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சின்னதம்பி கூறியதாவது: இந்தியா- இலங்கை அரசுகளிடையே மார்ச் 13 ல் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது அங்குள்ள படகுகள், மீனவர்களை விடுவிப்பதற்கான சூழல் இருந்தது.

பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அனுர திசநாயகேவும் பேசிய போது போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மே 6ல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முடிந்த பிறகு தான் இலங்கை அரசு படகுகள், மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளது.

மே 10க்கு பின் மீனவர்கள், படகுகளை விடுவிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தமிழக மீனவர்கள் எதிர்பார்த்து வருகிறோம் என்றார்.

Advertisement