குறை கூற வந்தவர்களுக்கு தர்பூசணி

திண்டுக்கல்: கலப்பட தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தர்பூசணி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 200க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அம்பாத்துரை ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில் ,எங்கள் பகுதி பத்திரகாளியம்மன், மீனாட்சியம்மன் உட்பட அனைத்து கோயில்களின் உற்ஸவ விழாக்களையும் பாரம்பரியமுறைப்படி அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து ஒற்றுமையுடன் நடத்தி வருகிறோம்.

தனிநபர்கள் சிலர் விழா வரி வசூல் செய்வதாக கூறி முழு தொகையும் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் வசூல் செய்யக் கூடாது என கோயில் நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டது. ஒற்றுமையை சீர்குலைத்து வன்முறையை தூண்டி, சாதி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

முற்றுகையிட்டு தர்ணா



தும்பலம்பட்டி ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர விழாவின் போது சிலர் பட்டாகத்தியுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

விழா கமிட்டியினர் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அவர்களை தப்பிக்க வைத்துவிட்டு விழா கமிட்டியினர் மீது உண்மையை விசாரிக்காமல் வழக்கு பதியப்பட்டுள்ளது. எஸ்.பி., அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றனர். இதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

தர்பூசணி விழிப்புணர்வு



தர்பூசணியில் கலப்படம் நடப்பதாக பரவிய வதந்திகளில் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கலப்படம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள், பொதுமக்கள் என 700 க்கு மேற்பட்டோருக்கு தர்பூசணி வழங்கப்பட்டது.

இனி மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கூட்டங்களில் தர்பூசணி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement