மேல்முறையீட்டு வழக்கில் அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

13

சென்னை: அரசு உதவிபெறும் கல்லூரி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ.50 லட்சம் அபராதத்துடன் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.


திருப்பூர் உடுமலைப்பேட்டை அரசு உதவி பெறும் கல்லூரியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கும்படி கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி கோவை மண்டல இணை இயக்குநர் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நிபந்தனை அடிப்படையில் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பணியிடங்கள் குறித்த ஆவணங்களையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 29) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கல்லூரி கல்வி இயக்குநர் பூரண சந்திரன் ஆஜரானார். நீதிபதிகள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் பூரண சந்திரன் நின்றதால் இது துரதிஷ்டவசமானது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் பணியிடங்கள் தொடர்பான ஆவணங்கள் அரசிடம் இல்லை என தெரிவித்ததால் கோர்ட்டில் உண்மை வெளிவரவிடாமல் கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தடுத்து விட்டதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.


தொடர்ந்து அரசின் இந்த மேல்முறையீட்டு வழக்கை ரூ.50 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அபராத தொகையில் ரூ.25 லட்சத்தை கல்லூரி கல்வி இயக்குநர் பூரண சந்திரனிடம் வசூலிக்க வேண்டும்.


மீதமுள்ள ரூ.25 லட்சம் ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும். 12 ஊழியர்களுக்கு தலா 1.50 லட்சத்தை 8 வாரங்களுக்குள் ஊதியமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement