தனிப்பட்ட வெறுப்பை மக்களிடம் காட்டாமல் கனிவாக பேசுங்கள்; போலீசாருக்கு முதல்வர் அறிவுரை

சென்னை : ''காவலர்கள் தங்களின் பணிச்சுமையையும், தனிப்பட்ட வெறுப்புகளையும், பொதுமக்களிடம் காட்டக்கூடாது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் அவரது பதிலுரை:

தமிழகத்தில் நிலவும் அமைதிக்கு, எனது துறையான காவல் துறையே காரணம். சட்டம் - ஒழுங்கு சீராகவும், தமிழகம் அமைதியான மாநிலமாகவும் இருப்பதால் தான், பெரிய அளவிலான ஜாதிச் சண்டைகளோ, மதக் கலவரங்களோ, பெரிய கலவரங்களோ, வன்முறைகளோ இல்லை.

கலவரங்களை துாண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழக மக்களே அதை முறியடித்து விடுகிறன்றனர்.

சட்டம் - ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில் தான் மண் விழுந்திருக்கிறது. குற்றச் சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.

இது மணிப்பூர் அல்ல



ஏதாவது சில இடங்களில் கவனக்குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால் கூட, அது சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதை திருத்திக்கொள்ள, நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இது மணிப்பூர் அல்ல; இது காஷ்மீர் அல்ல. உத்தர பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை.

சட்டம் -  ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது, நம்முடைய அனைவரின் கூட்டுப்பொறுப்பு. எனவே, அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சின்னச் சின்ன அலட்சியங்களைக் கூட தவிர்த்து, சுய ஒழுக்கத்தோடு எல்லாரும் இருக்க வேண்டும்.

ஒரு குற்றம் நடந்த பின், உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்கும் பலர் இருக்கின்றனர். அவர்களை பாராட்டும் அதே வேளையில், ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே, அதை உணர்ந்து தடுக்கும் முன்னெச்சரிக்கையும் நமக்கு தேவை.

சுற்றுப்புறங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம், செயல்பாடுகள் ஏதாவது தெரிந்தால், உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஓய்வில்லாமல், விழிப்புணர்வோடும், கண்காணிப்போடும் களத்தில் இருக்கும் காவல் துறையினரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

அதேபோல, காவல் துறையினரும் பொது மக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். காவல் துறையிடம் இருக்கும் அதிகாரம், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும் தான் என்பதை, அத்துமீறும் சில காவலர்கள் உணர வேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வு



காவல் உயரதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும். காவலர்கள் தங்களின் பணிச்சுமையையும், தனிப்பட்ட வெறுப்புகளையும், பொதுமக்களிடம் காட்டக்கூடாது.

காவல்துறையும் பொது மக்களும் நண்பர்கள் என்பதை, இரு தரப்பும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே உள்ள இந்த நல்லுறவை, மேலும் வலுப்படுத்த, என் நெஞ்சில் நீண்ட காலமாக இருந்து வரும் எண்ணத்தை, உணர்விற்கு செயல் வடிவம் கொடுக்க, நான் விரும்புகிறேன்.

முதன் முதலாக, மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட, செப்டம்பர் 6ம் தேதி, இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்.

இந்நாளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடித்து, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

தமிழகம் குற்றங்கள் நடக்காத மாநிலம், போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம், பாலியல் குற்றம் இல்லாத மாநிலம் என்ற நிலையை எட்ட வேண்டும். எங்கும் யாராலும் குற்றம் நடக்கக்கூடாது. மீறி நடந்தால், உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.

சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு, உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும். மனித வளர்ச்சியின் எல்லா குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழகம்,

குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால் தான் நமக்கு பெருமை. எனவே, இதில் பூஜ்ஜியம் வாங்குவதற்கு, ஒவ்வொரு காவலரும் 100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement