அடிப்படை வசதிகள் செய்து தர கணபதி நகர் மக்கள் எதிர்பார்ப்பு


கரூர்:

கரூர் நகரின் மையப்பகுதியில், மழை காலங்களில் சாக்கடை கழிவுநீர், மழை நீர் பல நாட்களாக தேங்கும் அவல நிலை உள்ளது.கரூர் மாநகராட்சி, சுங்ககேட் அருகே கணபதி நகர், கலைஞர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் மழை நீருடன், வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கணபதி நகர், கலைஞர் நகர் பகுதியில், தார்ச்சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. பல
ஆண்டுகளாக தார்ச்சாலை போட, கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் தடையாக உள்ளது. இதனால், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில், புகுந்து வீடுகளுக்கு செல்கிறோம். இதனால், சுங்ககேட் பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மேலும், மின் கம்பங்களில் உள்ள தெரு விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement