புதிய பஸ் நிலையம் திறப்பு மீண்டும் தள்ளிப்போகிறது

புதுச்சேரி; நீண்ட இழுபறிக்கு பின் இன்று நடைபெற இருந்த புதுச்சேரி பஸ் நிலையம் நிர்வாக சிக்கல் காரணமாக மீண்டும் தள்ளிப்போகிறது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் கடந்த 1990ல் கட்டப்பட்ட பஸ் நிலையம் மக்கள் தொகைக்கு ஏற்ப ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.34 கோடி செலவில் 4.41 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இப்பணி தடையின்றி, விரைந்து முடிப்பதற்காக பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக கடந்த ஜூன் மாதம் ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், பஸ் ஸ்டாண்ட் குண்டும், குழியுமாக உள்ளதாலும், மழை பெய்தால் சேறும், சகதியுமாகவும், வெயில் காய்ந்தால் புழுதி புயலாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கட்டுமான பணி கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்ததால், ஜனவரி மாதம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காரணங்களுடன் தள்ளிக் கொண்டே போனது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து நேரு எம்.எல்.ஏ., கடந்த 21ம் தேதி இதுகுறித்து சட்டசபையில் முதல்வரை சந்தித்து முறையிட்டார். அப்போது, முதல்வர் ரங்கசாமி பஸ் நிலையத்தை வரும் 30ம் தேதி இன்று திறந்திடலாம் எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வரும் பஸ் நிலையத்தை பார்வையிட்டதை தொடர்ந்து திறப்பு விழாவிற்கான இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பஸ் நிலையம் திறப்பு விழா தொடர்பாக கடந்த 25ம் தேதி உள்ளாட்சி துறை சார்பில் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நேற்று திறப்பு விழாவிற்காக பஸ் நிலையத்தில் பந்தல் அமைத்து, வாழை மரங்கள் கட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இரவு 7:30 மணி அளவில், பஸ் நிலைய திறப்பு விழா கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். அதனால், மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பஸ் நிலையம் திறப்பு விழா மீண்டும் தள்ளப் போகிறது.
ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கும் இடையே போட்டா போட்டியால், மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட பஸ் நிலையம் திறக்கப்படாமல் வீணாகி வருவதோடு, குண்டும், குழியுமான தற்காலிக பஸ் நிலையத்தில் மக்கள் படும் பாடுதான் மிக வேதனையாக உள்ளது.
முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே நீரு பூத்த நெருப்பாக இருந்த கருத்து வேறுபாடு, பஸ் நிலையம் திறப்பு விழா ஒத்தி வைப்பு மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.