காஷ்மீரில் மீண்டும் உயிர் பெற்றுள்ள தற்கொலை படையை முறியடிக்க, 'ஆன்டி பிதாயீன் ஸ்குவாடு'

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா நிச்சயம் பதிலடி தரும் என்பதால், காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக செயலற்று இருந்த பயங்கரவாத அமைப்புகளின், 'ஸ்லீப்பர் செல்கள்' மீண்டும் உயிர்பெற்றுள்ளன. பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்கள் உயிருக்கு ஆபத்து தரலாம் என்பதால், 42 சுற்றுலா மையங்களை மூடி அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலா பயணியர் 26 பேரை, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 'தி ரெஸிஸ்டன்ட் போர்ஸ்' எனும், சர்வதேச பயங்கரவாதிகளின் கிளையான 'காஷ்மீர் ரெஸிஸ்டன்ஸ்' இந்த தாக்குதல் நடத்தியதாக, தாமாக வீடியோ வெளியிட்டனர்.
ஆனால், இந்த 'பதிலி' அமைப்பின் பின்னால், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ்-இ-முகமது என மூன்று அமைப்புகளை சேர்ந்த, 14 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் 8 பேர், மற்ற அமைப்புகளை சேர்ந்த தலா மூவர் என 14 பேர் கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாக்., ராணுவ வீரர்கள்
தேசிய புலனாய்வு முகமை மற்றும் ஜம்மு - காஷ்மீர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் குறித்த பல விபரங்கள் தெரியவந்துள்ளன. லஷ்கர்-இ-தொய்பா அரசியல் விவகாரக்குழு தலைவன் சயிபுல்லா கசூரி, இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளான்.
அனந்த் நாக் மாவட்டத்தை சேர்ந்த ஹிஸ்புல் கமாண்டரான சுபேர் அகமது வானி என்பவன் தாக்குதலுக்கு, 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்துள்ளான். இன்னொரு பயங்கரவாதி ஹாரூன் ரஷீது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி பெற்றுள்ளான். இதில், சிலர் பாகிஸ்தான் துணை ராணுவ படையில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
பஹல்காம் தாக்குலுக்கு பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு மற்றும் இம்மூன்று பயங்கரவாத அமைப்புகள் கைகோர்த்து செயல்பட்டுள்ளன. பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்று, அங்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் சிலரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இவர்களின் நோக்கம், காஷ்மீரில் ஒருபோதும், அமைதி நிலவக்கூடாது என்பது தான்.
ஸ்லீப்பர் செல்கள்
கடந்த 2014க்கு பின், பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின், காஷ்மீர் மற்றும் எல்லையில் பாகிஸ்தானின் வாலாட்டம் குறைந்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தந்த உள்ளூர் மக்கள் வேறு தொழில் செய்யத் துவங்கினர். 2023ம் ஆண்டு காஷ்மீரில் தேர்தல் நடந்து, ஒமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்தபின், கெடுபிடிகள் குறைந்தன. பிரிவினைவாதிகள் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,), ஜம்மு- காஷ்மீர் போலீசார், ராணுவம் என நமது பாதுகாப்பு படை பிரிவுகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசும் துாதரக ரீதியில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, டில்லியில் முக்கிய ஆலோசனைகள் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தகவல் தொடர்பை இடைமறித்து நடத்திய சோதனையில், பயங்கரவாதிகளின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' உயிர்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்த, இந்த ரகசிய ஏஜன்ட் குழுக்கள் ஹிஸ்புல் முஜாஹின் மற்றும் பாக்., உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ளன.
'இந்தியாவுக்கு எதிரான போர்' என்ற அறைகூவலுடன், ஹிஸ்புல் பயங்கரவாதிகள், காஷ்மீரின் பல இடங்களில், மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, ஹிஸ்புல் பயங்கரவாதி ஷம்ஷிர் கான் என்பவன் பேசும் வீடியோ, பாதுாகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டமே, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஷம்ஷிர் கான் என்பவன் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியை சேர்ந்தவன். தற்போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளான்.
'இந்தியாவுக்கு எதிரான போர்' என்ற அறைகூவலுடன், ஹிஸ்புல் பயங்கரவாதிகள், காஷ்மீரின் பல இடங்களில், மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, ஹிஸ்புல் பயங்கரவாதி ஷம்ஷிர் கான் என்பவன் பேசும் வீடியோ, பாதுாகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டமே, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஷம்ஷிர் கான் என்பவன் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியை சேர்ந்தவன். தற்போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளான்.
-நமது நிருபர்-

