மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா? சேதமடைந்திருந்தால் புதுப்பிக்க கட்டடங்களில் மாநகராட்சி 'சர்வே'

கோவை ; கோவையில் உள்ள அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, மாநகராட்சி 'சர்வே' எடுக்கிறது.
கோவை மாவட்டத்தில், ஓராண்டில், 650 மி.மீ., மழை பெய்கிறது. நீர் நிலைகளை தேக்கி வைத்தாலே கோடையில் பற்றாக்குறை ஏற்படாது.
நகரப்பகுதியில் பெய்யும் மழை நீர், சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகிறது. அதை தவிர்க்க, ஒவ்வொரு கட்டடத்திலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி, நிலத்துக்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செய்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஏனெனில், சமீபகாலமாக நமது மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் கீழிறங்கி வருவது ஆய்வில் தெரியவந்தது.
இதற்கு தீர்வு காண, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அனைத்து கட்டடங்களிலும் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, 'சர்வே' எடுக்கும் பணியை, மாநகராட்சி மேற்கொள்கிறது.
வற்றிய 'போர்வெல்' களை 'ரீசார்ஜ்' செய்யவும் திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''நீலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என, மாநகராட்சி சர்வே எடுக்கிறது. கட்டமைப்பு பழுதடைந்து இருந்தாலோ, பயனின்றி இருந்தாலோ புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தனியார் கட்டடங்களிலும் கட்டமைப்பு ஏற்படுத்த அறிவுறுத்தப்படும். வரும் தென்மேற்கு பருவ மழை காலத்துக்குள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்தால், மழைநீர் வீணாகாமல் சேமிக்க முடியும். அரசு கட்டடங்களில் கட்டமைப்பு இல்லாத இடங்களில் அமைக்க, மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்படும்,'' என்றார்.