மே 2 முதல் மடீட்சியா கண்காட்சி

மதுரை; மதுரை மடீட்சியா சார்பில் இரண்டாவது உணவு தொழில்நுட்ப கண்காட்சியும் மூன்றாவது கட்டடப் பொருட்கள் மற்றும் கட்டுமான கண்காட்சியும் மே 2 முதல் 4 வரை தினமும் காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை ரிங் ரோடு ஐடா ஸ்கட்டரில் நடக்கிறது.

உணவுத்துறை சார்ந்த கருவிகள், பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்களின் மாதிரிகள், ஆய்வகங்களின் 100 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. மைசூரு மத்திய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தயாரிப்பு உணவு முறை, புதிய கண்டுபிடிப்புகள், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் வாழைப்பழ கொத்து வகைகள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் புதுமையான உணவு கண்டுபிடிப்பு குறித்த கருத்தரங்குகள் நடத்தப்படும். மே 4 காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை சமையல் போட்டி நடக்கிறது. 16 வயதிற்கு மேற்பட்டோர் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளை தயாரித்து கொண்டு வந்து போட்டியில் பங்கேற்கலாம்.

கட்டுமான கண்காட்சி



கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், உதிரி பாகங்களை தயாரிக்கும் குறு, சிறு நிறுவனங்களின் எதிர்கால தேவை குறித்து 150க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பல்வேறு தகவல்கள் இடம்பெற உள்ளன. பசுமை வீடு கட்டுமான முறை, எளியமுறையில் வீட்டுக்கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். மே 2 காலை 11:30 மணிக்கு மாநகராட்சி முதன்மை நகர் திட்ட அலுவலர் இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். அனுமதி இலவசம்.

Advertisement