மாடக்குளம், சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷன்கள்; 'தினமலர்' செய்தி எதிரொலியாக முதல்வர் அறிவிப்பு

மதுரை ; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 'மதுரை நகரில் மாடக்குளம், சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படும்' என என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு, மகளிர் ஸ்டேஷன் என 30 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனின் எல்லை பெரியது. இதனால் போலீசார் ரோந்து செல்லவும், குற்றங்களை தடுக்கவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியது.
அதேபோல் கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷன்கீழ் சிந்தாமணி ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகள் இணைந்ததால் அதன் எல்லையும் விரிவடைந்து வருகிறது. இதனால் இந்த ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதிகளை பிரித்து புதிதாக ஸ்டேஷன் உருவாக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.
இதுகுறித்து அரசுக்கு கமிஷனர் லோகநாதன் பரிந்துரைத்தார். அதை ஏற்று சட்டசபையில் நேற்று மாடக்குளம்,சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனிற்குட்பட்ட அச்சம்பத்து, விராட்டிபத்து, எச்.எம்.எஸ். காலனி, கோச்சடை, நடராஜ் நகர், பொன்மேனி உள்ளிட்ட பகுதிகளை கொண்டு மாடக்குளம் ஸ்டேஷன் உருவாக்கப்படும். அனுப்பானடி, தாய் நகர், கங்காநகர், மேல அனுப்பானடி, ஹவுசிங்போர்டு, சிந்தாமணி, ராஜம்மாள் நகர், கண்ணன் காலனி, வேலம்மாள் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை கொண்டு சிந்தாமணி ஸ்டேஷன் உருவாக்கப்பட உள்ளது. இவ்விரு ஸ்டேஷன்களிலும் தலா 75 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
தவிர, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தெப்பக்குளம் ஸ்டேஷனுக்கு ஓபுளா படித்துறை பகுதியிலும், கரிமேடு ஸ்டேஷனுக்கு ஆரப்பாளையம் பகுதியிலும் சொந்த கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.