பெண்களின் திறமையை குறைத்து மதிப்பிடக் கூடாது: அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் நாச்சியார் பேச்சு

மதுரை; 'பெண்களின் திறமையை குறைத்து மதிப்பிடக் கூடாது'' என மதுரையில் சி.ஐ.ஐ., ஐவின் (இந்திய பெண்கள் கூட்டமைப்பு) கிளை துவக்க விழாவில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவன உறுப்பினர் டாக்டர் நாச்சியார் தெரிவித்தார்.

சி.ஐ.ஐ., ஐவின் மதுரை கிளையை மதுரை தியாகராஜர் கல்லூரித்தலைவர் உமா கண்ணன், டாக்டர் நாச்சியார் துவக்கி வைத்தனர்.

சி.ஐ.ஐ., தமிழ்நாடு துணைத் தலைவர் தேவராஜன், மண்டலத்தலைவர் அஸ்வின் தேசாய், நிர்வாகி ஸ்ரீதரன் பங்கேற்றனர். மதுரை கிளை அமைப்பாளராக பூர்ணிமா வெங்கடேஷ், இணை அமைப்பாளராக டாக்டர் ஹேமா சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

டாக்டர் நாச்சியார் பேசியதாவது: பெண்களுக்கு கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது இல்லை. அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட கூடாது. உரிய பயிற்சி அளித்தால் பெண்கள் திறம்பட மேலாண்மை செய்வர்.

வீடோ, நிறுவனமோ, தொழிற் சாலையோ பெண்களின் தலைமையில் செயல்படும்போது சிறப்பாக இருக்கும்.

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தில் பணியாற்றுவதில் 87 சதவீதம் அதாவது 20 ஆயிரம் பேர் பெண்களாக உள்ளனர். நிறுவனம் வளர வேண்டும் எனில் பணியாளர் முதல் நிறுவனர் வரை அனைவருக்குமான சிந்தனை, குறிக்கோள் ஒன்றாக இருக்க வேண்டும். திறமை என்பது கல்வியால் வருவது அல்ல. முறையான பயிற்சி, ஈடுபாடு, கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் பட்டதாரி அல்லாத பெண்களும் சாதிக்க முடியும்.

இவ்வாறு பேசினார்.

Advertisement