மணக்கும் மல்லிகை... தாகம் தீர்க்க இளநீர்... மதுரை ரயில்வே ஸ்டேஷனில்

மதுரை; ரயில்வே ஸ்டேஷன்களில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' எனும் பெயரில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மதுரை கோட்டத்தின் கீழ் 47 கடைகள் உள்ளன. இதில் ரூ. 4.67 கோடி லாபம் 363 பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது.

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரத்தில் இரண்டு கடைகளில் சுங்குடி சேலைகள், மல்லிகை பூ விற்பனை செய்யபடுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை ஏலம் அடிப்படையில் சுழற்சி முறையில் கடைகள் மாற்றப்படுகின்றன. இதனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

சுங்குடி சேலை கடை காலை முதல் இரவு வரை விற்கப்படுகிறது. மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பூக்கள் மதியம் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பயணிகள் வருகை கணக்கிட்டு விற்கப்படுகிறது. பூக்கள் சீக்கிரத்தில் வாடி விடுவதால் நாள் முழுவதும் விற்பனை சாத்தியமில்லை என கூறுகின்றனர். ஆனாலும் காலை முதல் விற்பனை செய்ய பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

வெயில் அதிகரித்து வருவதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 ஸ்டேஷன்களில் இளநீர் கடை திறக்கப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை விற்கப்படுகிறது. அரிவாள் பயன்படுத்த கூடாது, குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ரயில்வே விதித்துள்ளது.

Advertisement