'விடிந்தும்' வராத 'விடியல் பஸ்' ஒரே ஒரு நடையுடன் நிறுத்தம்

9

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இருந்து ஏப்., 20ல், 'பி11' என்ற புதிய வழித்தடத்தில் மகளிர் விடியல் புதிய பஸ் சேவையை, தி.மு.க., - எம்.பி., முரசொலி, திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கினர்.

இந்த பஸ், ஒரத்த நாட்டில் இருந்து வல்லம் ரோடு, தென்னமநாடு, தெற்குநத்தம், ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, கா.தெக்கூர், கா.கோவிலுார், பிளைக்கான்சாவடி, கொல்லங்கரை, வடக்குப்பட்டு, சூரியம்பட்டி, நாஞ்சிக்கோட்டை வழியாக தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் என, அறிவிக்கப்பட்டது.

துவக்க நாளில், பஸ் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில், மக்கள் பஸ்சுக்கு ஆரத்தி எடுத்தும், டிரைவர், கண்டக்டருக்கு பொன்னாடை போர்த்தி, இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். துவங்கப் பட்ட ஒருநாள், ஒரு நடை மட்டுமே இந்த பஸ் ஓடியது.

மறுநாள் விடிந்து பஸ்சுக்காக காத்திருந்தும், இந்த விடியல் பஸ் வரவில்லை. 15 கிராம மக்கள் பயன்பெற முடியும் என்பதால், பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

எம்.பி., - எம்.எல்.ஏ., துவக்கி வைத்த பஸ் சேவை இப்படி ஆகிவிட்டதே என இருவரையும் பொது மக்கள் தேடிச் சென்று புகார் கூறுகின்றனர்.

Advertisement