ரயிலில் பயணியரை மிரட்டி நகை, பணம் கொள்ளை
அமராவதி: தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாதில் இருந்து திருப்பதிக்கு, ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் மாலை நிஜாமாபாதில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை கூட்டி சந்திப்பு அருகே வந்தது.
அப்போது கூட்டி சந்திப்பில் கொல்கட்டா - கோவா இடையேயான அமராவதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றிருந்தது. இதனால் சிக்னலுக்காக ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் நிலையம் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் ரயில் பெட்டிக்குள் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அதிகாலை நேரம் என்பதால் பயணியர் உறக்கத்தில் இருந்தனர்.
ரயிலுக்குள் ஏறிய கொள்ளை கும்பல், பெண் பயணியரை மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த 30 சவரன் நகைகளையும், ஒரு நபரிடம் இருந்து 4,000 ரூபாய் ரொக்கத்தையும் பறித்துக்கொண்டு ரயிலை விட்டு வெளியேறி தப்பிச் சென்றது.
நகைகளை பறிகொடுத்த பெண்கள், ரயில்வே போலீசில் புகாரளித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2ம் தேதி ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் ரயில் சிக்னலை சேதப்படுத்தி, சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள் பயணியரின் நகை, பணம், மொபைல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பினர்.
இந்த தொடர் சம்பவத்தில் ஈடுபடுவது பீஹார் அல்லது சென்னையைச் சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில், ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.