தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா? சுப்ரீம் கோர்ட் சந்தேகம்
புதுடில்லி: 'நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், கட்சிப் பொறுப்பில் அமர்ந்து கொண்டு தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்களை மட்டும் எப்படி தேர்வு செய்ய முடியும்?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
பொதுநல மனு
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், 2017ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். அந்த காலகட்டத்தில் அவர்கள் சொந்தக் கட்சியில் பொறுப்பு வகிக்கின்றனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் ஒருவர் கட்சி பதவிகளை வகிக்கவோ, புதிய கட்சி துவங்கவோ தடை விதிக்க வேண்டும். ஒரு நபரோ அல்லது குழுவோ மிக எளிதாக ஒரு அரசியல் கட்சியை துவங்கும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29ஏ அளிக்கிறது.
இதில் திருத்தம் செய்து, அரசியல் கட்சிகளின் பதிவு மற்றும் பதிவு நீக்கத்தை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஒத்திவைப்பு
அப்போது, 'நீதிமன்றத்தால் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கலாம்? அப்படி செய்தால் ஜனநாயகத்தின் புனிதத்தன்மை எப்படி பாதுகாக்கப்படும்?' என, அமர்வு கேள்வி எழுப்பியது.
வழக்கின் இறுதி விசாரணையை ஆக., 11க்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இருதரப்பையும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.