பகிர்மான குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்; வாரியம், உள்ளாட்சி இணைந்து சீரமையுங்கள்

கம்பம்; பகிர்மான குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவது அதிகரித்து வருகிறது. அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் குடிநீர் வீணாகிறது. குடிநீர் வாரியம், உள்ளாட்சியும் இணைந்து சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் லோயர்கேம்ப், உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் குடிநீர் பம்பிங் செய்து இப்பகுதி ஊர்களுக்கும் வினியோகம் செய்கின்றனர். குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் இப் பணியை மேற்கொள்கின்றனர். குடிநீர் பம்பிங் செய்து சம்பந்தப்பட்ட ஊருக்கு கொண்டு செல்லும் போது பகிர்மான குழாய்கள் உடைந்து வீணாகி வருகிறது. மேலும் வால்வு அமைத்துள்ள இடங்களில் குடிநீர் அதிகளவு வீணாகிறது. உத்தமபளையம் டாக்சி ஸ்டாண்டில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து ஒரு மாதமாக குடிநீர் சாக்கடையில் கலந்து வருகிறது.

கம்பம் அருகே உள்ள பைத்தியகாரன் ஓடை, சேனை ஓடை, நடராசன் திருமண மண்டபம் எதிரில், சின்னமனூர் பைபாஸ் , கோம்பை ரோடு உள்ளிட்ட பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது.

இது தவிர தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, ஒட்டல்களுக்கு கொண்டு செல்வது என பல இடங்களில் பைப் லைன்களை சேதப்படுத்தி குடிநீரை வீணாக்குகின்றனர். மாவட்டம் முழுவதும் குடிநீர் வீணாவதை தடுக்க குடிநீர் வாரியமும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement