மரம் ஏறும் தொழிலாளி கொலை; வாலிபரை வெட்டி டூவீலர் எரிப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் 52, தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் அவ்வழியாக சென்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி பவித்திரன் 19, அரிவாளால் வெட்டப்பட்டார். அவரது டூவீலர் எரிக்கப்பட்டது. இக்கொலை மற்றும் அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண்டிபட்டி குப்பாம்பட்டி அருகே மலைக்கரட்டில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராஜதானி போலீசார் அங்கு விசாரணை செய்தனர்.

தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நபர் கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் என தெரிந்தது.

அருகே எரிந்த நிலையில் டூவீலர் ஒன்றும் கிடந்தது. அதுகுறித்தும் போலீசார் விசாரித்த போது எரிந்த டூவீலரின் உரிமையாளரான கன்னியப்பப்பிள்ளைபட்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி பவித்திரன் என்பதும், இரவில் பவித்திரன் அந்த வழியாக டூவீலரில் சென்றபோது அவரை மறித்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி, டூவீலரை பறித்து சென்றதும் தெரிய வந்தது. படுகாயம் அடைந்த பவித்திரன் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் உள்ளார்.

பவித்திரனை தாக்கியவர்கள் தான் முருகனையும் கொலை செய்தார்களா என போலீசார் சந்தேகிக்கின்றனர். முருகன் இரவில் மலைச்கரட்டுக்கு எதற்காக சென்றார் எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் மோப்பநாய் 'லக்கி' அங்கும் இங்கும் ஓடியது. எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அப்பகுதியில் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement