உணவு வணிகர்களின் விபரங்கள் இல்லை; உணவு பாதுகாப்பு துறை மீது குற்றச்சாட்டு
சென்னை: 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையினரிடம், தங்கள் பகுதிக்கு உட்பட்ட உணவு வணிகர்களின் விபரங்கள் இல்லை. உணவு மாதிரிகளை சேமிக்க குளிர்சாதன சேமிப்பு வசதி இல்லை' என, 2023ம் ஆண்டிற்கான இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ், 1.29 லட்சம் உரிமம்; 5.59 லட்சம் பதிவு பெற்ற உணவு வணிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்களிடம், தங்கள் எல்லைக்கு உட்பட பகுதிகளில் உள்ள, உணவு வணிகர்களின் விபரங்கள் இல்லை. இவை சந்தையில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு வழிவகுக்கிறது.
மாநிலத்தில் உள்ள, 54,439 அங்கன்வாடி மையங்களில், 40,139 மட்டுமே, உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன. பதிவு பெறாத அங்கன்வாடிகளில், தரம் குறைந்த, மாசடைந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டால், அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தணிக்கையின் போது தமிழகத்தில், 93 இறைச்சி கூடங்கள் உள்ளன.
அதில், 62 இறைச்சி கூடங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மூன்றில் ஒரு பங்கு கூடங்கள் சட்டத்திற்கு உட்படாமல் செயல்படுகின்றன.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, பதிவு செய்தல் மற்றும் ஓராண்டிற்கு ஒருமுறை புதுப்பித்தல் அவசியம்.
அவ்வாறு புதுப்பிக்காதவர்கள் மீண்டும் வணிகம் செய்ய முடியாது. ஆனால், 2023ம் ஆண்டில், 56,149 வணிகர்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் வணிகத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளாட்சி மற்றும் ஜி.எஸ்.டி., துறைகள் இடையே, ஒருங்கிணைப்பு இல்லை.
உணவு பாதுகாப்பு துறையினர், உணவு மாதிரிகளை சேமித்து வைக்க, குளிர் சேமிப்பு வசதியுடன் கூடிய மேலாண்மை அமைப்பை, கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்படுத்தவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், மிகவும் மோசமான நிலையில், மாதிரி சேமிப்பு கிடங்குகள் இருந்தன.
உணவு வணிகர்கள் ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் கையாண்ட, ஒவ்வொரு வகை உணவு பொருட்களுக்கும், உரிமம் வழங்கும் ஆணையத்திடம் மே, 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், 39 சதவீதம் வரை அவ்வாறு சமர்பிக்கப்படாமல் உள்ளது.
எனவே, ஆண்டுதோறும் சமர்பிக்க வேண்டிய வணிகர்களின் வரிசை பட்டியலை உருவாக்க, வணிக உரிமத்துடன் ஆதார் இணைத்து, புதுப்பித்தலின்போது கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.