போக்சோ வழக்கு ரத்து இல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை:'பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை, திருமணம் செய்து கொண்டதால், போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த சிறுமி காணாமல் போனதாக, அவரது பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், விஜயகுமார் என்ற வாலிபருடன் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வாலிபர் விஜயகுமார் மீது கடத்தல், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கு விசாரணையின் போது, 'விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும், இதையறிந்த தன் பெற்றோர் வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால், காதலர் விஜயகுமாருடன் சென்று விட்டேன்' என்றும், சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, போக்சோ வழக்கில் இருந்து வாலிபரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம், கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை, விஜயகுமார் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''சம்பவம் நடந்தபோது, தன்னுடன் வந்த சிறுமியுடன் வாலிபர் உறவில் இருந்துள்ளார்.

சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்று, வழக்கை ரத்து செய்தால், போக்சோ சட்டத்தை இயற்றியதன் நோக்கம் தோற்கடிக்கப்படும். மேல்முறையீடுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றால், அது பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்,'' எனக்கூறி, கடத்தல் வழக்கில் விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை உறுதி செய்தும், போக்சோ வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

Advertisement