பஹல்காம் பதிலடி: அவசரத்திற்கு இடமில்லை
'காஷ்மீரில் 26 அப்பாவிகள் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்திய அரசு பதிலடி தாக்குதல் ஏதும் நடத்தவில்லையே' என்ற அவசரம் பொதுமக்கள் மத்தியில் தென்படுகிறது.
கோபம் வந்த வேகத்தில் பதிலடி தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சர்வதேச அரங்கில் நம் நாட்டின் இடத்தையும் நம் இலக்குகளையும் கருத்தில் கொண்டே அதை செய்ய முடியும்.
ஐ.நா., தீர்மானம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை ஐ.நா., பாதுகாப்பு சபை ஒருமனதாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக, இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மானம் கூறியுள்ளது.
இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி. ஏனெனில், இந்த தீர்மானத்தை ஆதரித்து, பாதுகாப்பு சபையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சுழல் உறுப்பினர்களில் ஒன்றான பாகிஸ்தானும் வாக்களித்து உள்ளது. அதேபோல, ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் அரசு இயந்திரமே இருக்கிறது என்ற இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்து பார்க்கும்போது, பாதுகாப்பு சபை தீர்மானம், பூனையை மடியில் கட்டி வைத்துக்கொண்டு சகுனம் பார்ப்பதற்கு சமம்.
ஆனால், இந்த தீர்மானத்தோடு இந்தியா அலட்சியமாக விட்டுவிடாது.
அவ்வப்போது, பாதுகாப்பு சபையின் பிற உறுப்பு நாடுகளிடம் இந்த தீர்மானம் குறித்து அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, என்று கேட்டுக்கொண்டே இருக்கும். இது பாகிஸ்தானுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தும்.
அதேசமயம், இந்தியா, அந்த தீவிரவாதிகளை குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் இருக்கும்.
மகுடத்தில் மயிலிறகு
பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதாகவோ அல்லது அதிரடி தாக்குதல்கள் நடத்தப்போவதாகவோ கூறவில்லை. கவனமாக பேசிய அவர், அந்த தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டப் போவதாகவே கூறி உள்ளார்.
வழக்கமாக இஸ்ரேல் தான் குறிப்பிட்ட நபர்களை மட்டும் குறிவைத்து தாக்கி வெற்றியும் பெறும். பிரதமர் சொன்னவாறு நிகழுமேயானால், அது நமது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளின் மகுடத்தில் ஒரு மயிலிறகு சேர்ந்தால் போலாகும்.
காரணம், ஆனானப்பட்ட அமெரிக்காவே, இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாத தலைவன் ஒசாமாவை குறிவைக்க ஆப்கானிஸ்தான் மீது பத்தாண்டுகள் போர் தொடுக்க வேண்டியிருந்தது.
போர் ஏன் இல்லை?
பாகிஸ்தானுடன் போர் வெடித்தால், இந்தியா வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதன் மூலம் உலகின் மூன்றாம் இடத்தை நோக்கி பயணிக்கும் நமது பொருளாதார வளர்ச்சி தடைபடும்.
இதனை மனதில் கொண்டே அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
குறைந்த அளவிலேயே பொருளாதாரம் பாதிக்கும் வகையிலான பதிலடி திட்டம் எது என்றெல்லாம் அரசு கணக்கிடுகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடு சீனா, பாகிஸ்தானில் பல பில்லியன் டாலர்களுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவுடனான மோதலால், தற்போது, நம்மிடம் நட்பு பாராட்ட முயல்கிறது சீனா. பகிரங்கப் போர் என்று அறிவித்தால், பாகிஸ்தானில் மேற்கொண்டுள்ள முதலீடுகளால், பாகிஸ்தானை ஆதரிக்க கட்டாயம் ஏற்படலாம். அதனால், சீனாவுடனான நல்லுறவால், நமக்கு கிடைக்கக்கூடிய லாபம் பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவை பொறுத்தவரையில், அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உற்ற நண்பர். ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் சி.ஐ.ஏ எனப்படும் உளவுத்துறை பாகிஸ்தானை மறைமுகமாக ஆதரிக்கலாம்.
அதுபோன்றே ஐரோப்பிய நாடுகளும் தங்களது சுயநலத்தை முன்வைத்து முடிவுகளை எடுக்கலாம். அவர்களில், பிரான்ஸ் மட்டும் இந்தியா பக்கம் சாயலாம். அவ்வாறு சாயாமல் நடுநிலை வகிப்பதாகக்கூட கூறிக் கொள்ளலாம்.
இதுவரை, சர்வதேச அரங்கில், இந்தியாவிற்கு கண்மூடித்தனமான ஆதரவு தெரிவித்து வந்த ரஷ்யா கூட, தற்போது நமக்கு அறிவுரை வழங்கலாம்.
உக்ரைன் யுத்த விஷயத்தில், ரஷ்ய அதிபர் புடினிடம் மோடி கூறிய, 'இது போரின் சகாப்தம் அல்ல' என்ற வாக்கையே, அவர் திருப்பி அடிக்கலாம்.
இந்த பின்னணிகளை உள்வாங்கிக் கொண்டே, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும். அதுகுறித்து, தவறான செய்திகளோ, முந்திரிக்கொட்டை தனமான கருத்துகளோ, அரசின் முடிவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
--என். சத்தியமூர்த்தி-
சர்வதேச அரசியல் ஆய்வாளர்
மேலும்
-
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம்
-
மகள் மாயம் தாய் புகார்
-
கல்லாறு-பர்லியார் மலையேற்றம் இன்று துவக்கம்
-
தாயனூரில் கண் சிகிச்சை பரிசோதனை முகாம்
-
வடக்கு அலுவலகம் தடுமாற்றம்; ஒரேயொரு ஆய்வாளர் இருந்தால் போதுமா? ஆர்.டி.ஓ., இல்லை; தாமதமாகும் பணிகள்
-
அக் ஷய திருதியை திருநாள் ரூ.300 கோடி நகை விற்பனை