பொது பல்கலைகளில் வல்லுநர்களை துணைவேந்தராக்க எதிர்ப்பு

சென்னை:'தமிழகத்தில் உள்ள பொது பல்கலைகளுக்கு, தொழில்சார் வல்லுநர்களை நியமிக்கக்கூடாது' என, பல்கலை பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலை, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, அண்ணா பல்கலை, வேளாண்மை பல்கலை, மீன்வள பல்கலை, இசை பல்கலை, கால்நடை பல்கலை உள்ளிட்ட தொழில்சார் பல்கலைகளில், அந்தந்த துறை சார்ந்த பேராசிரியர்கள் தான் துணை வேந்தர்களாக முடியும்.

இதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்றி உள்ளது. அதேநேரம், சென்னை, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், சிதம்பரம் அண்ணாமலை, மதுரை காமராஜர், சேலம் பெரியார் உள்ளிட்ட பொதுப்பல்கலைகளின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு, அதுபோன்ற சட்டத்திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.

அதனால், இந்த பொதுப் பல்கலைகளுக்கு, வேளாண்மை, இன்ஜினியரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பேராசிரியர்களாக இருந்தவர்கள், துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு, கலை, அறிவியல் படிப்பு குறித்தோ புதிய படிப்புகள் குறித்தோ, பேராசிரியர்களை நியமிப்பது, அத்துறைகளை நிர்வகிப்பது குறித்தோ, அடிப்படை புரிதல் இருப்பதில்லை. இதனால், நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படுகிறது.

துறை தலைவர்களுக்கும், துணைவேந்தருக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதுடன், புதிய நியமனங்களிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்க செயலர் சரவணன் கூறியதாவது:

சென்னை பல்கலையில், இன்ஜினியரிங் துறை பேராசிரியரான கவுரி துணைவேந்தராக்கப்பட்டார். அவரின் பதவி காலத்தில், நிர்வாகமே சீர்குலைந்து விட்டது.

சேலம் பெரியார் பல்கலையில், வேளாண் பல்கலை பேராசிரியர் ஜெகன்நாதன் துணைவேந்தராக உள்ளார். மதுரை காமராஜர் பல்கலையில், இன்ஜினியரிங் பேராசிரியர் ஜெயகுமார், திருவள்ளுவர் பல்கலையில் வேளாண் பல்கலை பேராசிரியர் ஆறுமுகம் ஆகியோர் துணைவேந்தர்களாக உள்ளனர்.

தற்போது, தமிழகத்தில் உள்ள பல்கலைகளுக்கு, அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 12 பொது பல்கலைகளுக்கு, தொழில்சார் பேராசிரியர்களை துணைவேந்தராக நியமிக்கக்கூடாது என, உயர் கல்வித்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement