தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க எப்.ஆர்.எஸ்., செயலி மாநிலம் முழுதும் விரிவாக்கம்
சென்னை:'தலைமறைவு குற்றவாளிகள், சந்தேக நபர்கள் மற்றும் குற்ற பின்னணி உடையவர்களை, முக அடையாளங்கள் வாயிலாக கண்டறியும் எப்.ஆர்.எஸ்., செயலி பயன்பாடு, மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது' என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது, சந்தேக நபர்கள் குறித்த விபரங்களை, அவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ள, சென்னையில் எப்.ஆர்.எஸ்., எனும் முக அடையாளங்கள் வாயிலாக, துப்பு துலக்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக உருவாக்கப்பட்ட செயலியை, போலீசார் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் உதவியுடன், கடந்த ஆண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 14,126 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நபர்களை, எப்.ஆர்.எஸ்., செயலி வாயிலாக சோதனை செய்ததில், 763 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
அதேபோல, தனி நபர்கள் மற்றும் அலுவலகங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது, அந்த நபர்கள் குறித்த விபரங்கள் கேட்டு, காவல் துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கின்றன.
அவ்வாறு, 16,640 பேர் குறித்து ஆய்வு செய்தில், 1,523 பேர் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைவர்கள் என்பது, எப்.ஆர்.எஸ்., செயலி வாயிலாக அறியப்பட்டது.
சந்தேக நபர்கள், தலைமறைவு குற்றவாளிகள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தாரர்களின் விபரங்களை, சில வினாடிகளில் போலீசார் அறிந்து கொள்ள, செயலி உதவியாக உள்ளது.
எனவே, இத்திட்டம் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதேபோல, போலீசாரின் ரோந்து பணிகளை கண்காணிக்க, 'ஸ்மார்ட் காவலர்' என்ற செயலியை, காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்செயலியும் மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.