மோசடி நிதி நிறுவன இயக்குநர்கள் 16 பேருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'
சென்னை:'மோசடி நிதி நிறுவன இயக்குநர்கள் 16 பேர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது' என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டு, மோசடி நிதி நிறுவனங்களிடம், 18,869 பேர், 1,427 கோடி ரூபாயை இழந்துள்ளனர். இது தொடர்பாக, 205 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மோசடி நிதி நிறுவனங்கள் வாங்கியுள்ள, 1,199 கோடி ரூபாய் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவற்றை, சட்ட ரீதியாக முடக்குவதற்கான பணிகள் நடக்கின்றன.
ஐ.எப்.எஸ்., மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட மோசடி நிதி நிறுவனங்களின் இயக்குநர்கள், 16 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, விமான நிலையங்களுக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை கைது செய்து ஒப்படைக்குமாறு, சி.பி.ஐ., வாயிலாக, இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசாருக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினர்.