மேக்ஸ்வெல் விலகல்: பஞ்சாப் அணிக்கு சிக்கல்

சென்னை: விரல் எலும்பு முறிவு காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார்.

இந்தியாவில் நடக்கும் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மேக்ஸ்வெல் இடம் பெற்றிருந்தார். இதுவரை விளையாடிய 7 போட்டியில், 48 ரன் மட்டும் எடுத்த மேக்ஸ்வெல், 4 விக்கெட் சாய்த்திருந்தார். சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டாவுக்கு எதிரான லீக் போட்டியில் இவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவு உறுதியானது. இதனையடுத்து சென்னைக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. காயம் குணமடைய தாமதமாகும் என்பதால், பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக மேக்ஸ்வெல் தெரிவித்தார்.
பஞ்சாப் அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், 'கை விரல் காயத்தால் பிரிமியர் லீக் தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார். இவர், விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறோம்,' என, தெரிவித்திருந்தது. சிறந்த 'ஆல்-ரவுண்டரான' மேக்ஸ்வெல் விலகியது, பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக அமையலாம்.



ஷ்ரேயஸ் அபராதம்


சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றமாகும். இது முதன்முறை என்பதால் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயசிற்கு மட்டும் போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement