ராமேஸ்வரத்தில் 'டிரெக்கிங்' வசதியுடன் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் டிரெக்கிங் வசதியுடன், 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா மையம் அமைக்க, பாறைகளை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலா மையங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் தீவு திகழ்கிறது. இங்குள்ள ராமநாதசுவாமி கோவில், ராமர் பாதம், தனுஷ்கோடி, குருசடை தீவு உள்ளிட்ட இடங்களுக்கு ஆண்டிற்கு 3 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் சுற்றுலா தலங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ராமர் பாதம் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லங்காடு காட்டுப்பகுதியில், 125 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த வனப்பகுதி நிலத்தை சீரமைத்து மரக்கன்றுகள் நடவு செய்து, அவ்வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணியர் டிரெக்கிங் செல்லும் வகையில் சூழலியல் சுற்றுலா மையம் அமைக்கப்பட உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2024ல் சென்னை அதிகாரிகள் கல்லங்காட்டில் டிரெக்கிங் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். தற்போது, 75 லட்சம் ரூபாயில் சூழலியல் சுற்றுலா மையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.
அடுத்த ஆண்டு, கல்லங்காட்டுக்குள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சூழலியல் மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. என்னென்ன அம்சங்கள் அமையும் என்பது குறித்து பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.