தண்டனைக்கு பயந்து தப்பியவர் போலீசிடம் மீண்டும் சிக்கினார்

கோவை:கோவை செல்வபுரத்தில், டீத்துாள் கடையில் 2006ல் பணியாற்றி வந்த மகேஷ் என்பவரை கத்தியால் குத்தி, 1 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற வழக்கில், சேலம் மேட்டூரை சேர்ந்த செந்தில்குமார், 40, மதிவாணன், 30, ரமேஷ், 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூவரும் ஜாமினில் வெளியே வந்தனர். மதிவாணன் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவானார். செந்தில்குமார் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இவ்வழக்கு கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது; ஏப்., 28ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோர்ட்டுக்கு, தன் மனைவி, குடும்பத்தினருடன் செந்தில்குமார் வந்திருந்தார். இவ்வழக்கில், அவருக்கு ஐந்தாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனைக்கு பயந்த செந்தில்குமார், கோர்ட்டில் இருந்து தப்பினார். அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
செல்வபுரம் குற்றப்புலனாய்வு போலீசார் செந்தில்குமாரை தேடினர். அவரின், மொபைல் போன் டவர்களை கண்காணித்ததில், அவர் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.