அனைத்து கட்சி கூட்டத்திற்கு வராமல் பிரதமர் எப்படி பீஹார் செல்லலாம்: கார்கே கேள்வி

10

புதுடில்லி: '' காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல், பிரதமர் எப்படி பீஹார் சென்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றலாம்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க டில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காததற்கு காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்தது. அவர் பங்கேற்று இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தவறு எங்கே நடந்தது யார் காரணம் தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்திற்கு வராமல் அவர் எப்படி பீஹார் சென்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றலாம். நாட்டின் ஒருமைப்பாடு என வரும் போது நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். எங்களை பொறுத்த வரை நாடே முதன்மை. இவ்வாறு கார்கே கூறினார்.

Advertisement