திருமணம் செய்ததால் வன்கொடுமை வழக்கு ரத்தா?

இந்தியா கேட்:பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி, தன்னை பக்கத்து வீட்டு இளைஞரும் அவரது மைத்துனரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபர், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிரிஷ் கத்பாலியா, 'திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது. அதுபோன்று செய்தால், தவறான முன்னுதாரணாமாகிவிடும். உண்மையான பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தும். புகார்களைப் பதிவு செய்து திரும்பப் பெறும் போக்கை கட்டுப்படுத்த வேண்டும்' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement