'நாங்களென்ன வண்டுமுருகன்களா' : மதுரை நகர் தி.மு.க.,வில் கொந்தளிக்கும் வ.செ.,க்கள்

மதுரை நகர் தி.மு.க., எல்லைக்குள் வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு என 4 சட்டசபை தொகுதிகள் இருந்த நிலையில், மேற்கு தொகுதியை பிரித்து அமைச்சர் மூர்த்தி வசம் கொடுக்கப்பட்டது.

அத்தொகுதியில் தற்போதைய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான முன்னாள்அமைச்சர் செல்லுார் ராஜூவை வரும் தேர்தலில்தோற்கடித்து காட்டுவேன் என சபதமிட்டு களம் இறங்கியுள்ளார் அமைச்சர் மூர்த்தி.

போர்க்கொடி உயர்த்தல்



இதன் எதிரொலியாக அமைச்சர் 'ஆசியால்' மேற்கு தொகுதியில் வ.செ.,க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளனர். ஆனால் நகர் தி.மு.க.,வில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மட்டுமே மாவட்ட நிர்வாகிகளால் மதிக்கப்படுகின்றனர்.

களப் பணியாற்றும் வ.செ.,க்களை 'கண்டுகொள்வதில்லை' என அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் மந்தமாக பணியாற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

நகர் தி.மு.க.,வில் கட்சிப் பணியாற்ற மட்டும் வ.செ.,க்கள் அழைக்கப்படுகின்றனர். அதேநேரம் மாநகராட்சியில் டெண்டர்கள் என வந்துவிட்டால் கவுன்சிலர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வார்டுகளில் நடக்கும் திட்டப் பணிகளால் கவுன்சிலர்கள் 'நல்ல நிலையில்' இருந்தும் வ.செ.,க்களை கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகிகளிடம் இதுகுறித்து தெரிவித்தால் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

மேற்கு தொகுதி பிரிந்து சென்றாலும் அங்குள்ள நிர்வாகிகளுக்கு இன்னும் 'கரிசனம்' காட்டுகின்றனர். அதாவது, வடக்கு தொகுதியில் உள்ள அரசு அலுவலக, நுாலக கேண்டீன்கள் ஒப்பந்தம் மேற்கு தொகுதி நிர்வாகிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுஉள்ளது.

இருசக்கர வாகன காப்பகம், மார்க்கெட் ஒப்பந்தங்களை பெறுவதிலும் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்களின் கை ஓங்குகிறது. எங்கள் நிலைமை, மக்களை பாதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் செய்யும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம் என்றனர்.

Advertisement