ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்

16


சென்னை: '' ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உரிமை கோரும் தி.மு.க., ஜாதியை பற்றி பேசக்கூடாது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தவறு



சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில அமைச்சர்களும் உள்ளனர். நடுத்தர மக்கள் மீது வரி விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டிக்கு முன்னர் வாட் வரி, மாநிலங்களில் சுங்க வரி உட்பட பல வரிகள் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியை சேர்த்து தான் ஜிஎஸ்டி வந்துள்ளது. ஆனால், ஜிஎஸ்டிக்கு பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு.

வெளிப்படை



ஜிஎஸ்டி.,க்கு முன்பு இருந்ததை விட தற்போது வரி குறைந்துள்ளது. இந்த வரியை குறைக்க தான் அமைச்சர்கள் குழு உள்ளது. முன்பு வரி விதிக்கப்படுவதை காட்டியிருக்க மாட்டார்கள். தற்போது வரி குறித்து தெளிவாக குறிப்பிடுவதால் தற்போது வரி கட்டுவது போல் தோன்றுகிறது. வரி முன்பும் இருந்தது. தற்போதும் உள்ளது. தற்போது வெளிப்படையாக காட்டுவதினால், வரி வந்ததாக நினைப்பது தவறு. ஜிஎஸ்டி எடுக்கும் தீர்மானம் மாநில அமைச்சர்களின் ஒப்புதலுடன் தான் எடுக்கப்படுகிறது. நான் மட்டும் தனியாக கேட்க முடியாது.

சமத்துவம்



ஜாதி வாரி கணக்கெடுப்பில் தி.மு.க., வெற்றியை தேடுகிறதா? அக்கட்சிதான் சமத்துவம் என்கிறது. அக்கட்சி ஜாதி பற்றி பேசக்கூடாது. அனைத்திலும் அரசியல் ரீதியாக லாபத்தை தேட முயற்சி செய்யக்கூடாது. தமிழகத்தில் சமத்துவத்தை கொண்டு வர வேண்டும்.


தமிழகத்தில் இன்றும் ஜாதி பெயருடன் பலகைகளை பார்க்கிறேன். குடிநீரில் மனித கழிவு கலப்பது தமிழகத்தில் தான் நடந்தது. வட மாநிலங்களில் நடக்கவில்லை. அரசியல் ரீதியாக பார்க்காமல் அதில் கிடைக்கும் தரவுகளை வைத்து பின் தங்கிய மக்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது என யோசிக்க வேண்டுமே தவிர, நாங்கள் வென்றோம், தோற்றோம் எனக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.

நன்றி



தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதாக ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். கிராம வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பணம் ஒதுக்கியவுடன் நன்றி என தெரிவித்தனர். தனிப்பட்ட முறையில் நன்றி என தெரிவிக்கின்றனர். வெளிப்படையாக இல்லை என்கின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


சிரிப்பு





அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை விமர்சிப்பதற்கு முன்னால், நீதிமன்றம் மூலமாக அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் எந்த கூட்டணிக்கு வந்தது. ஊழல் காரணமாக சுப்ரீம் கோர்ட் வரை சென்று அமைச்சர் ஒருவரும், இன்னொரு விஷயத்திற்காக மற்றொரு அமைச்சரும் பதவி விலகினர். அவர்கள் பதவி விலகி கொண்டு உள்ளனர். ஊழல் கூட்டணியினர் எங்கள் கூட்டணியை பற்றி பேசுவது என்பது எனக்கு சிரிப்பு வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement