கோயில் குத்தகைதாரரால் அறநிலையத்துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து ஆர்.டி.ஐ., பதிலில் அம்பலம்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஹிந்து அறநிலையத்துறை கோயில் சொத்துக்களை பராமரிக்கும் குத்தகைதாரர் மூலம் அதிகாரிகளின் உயிர் உடைமைக்கு ஆபத்து இருப்பதாக ஆர்.டி.ஐ., மூலம் தகவல் தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் உறுமன்குளத்தில் உள்ள சீத்தலை சிவலிங்கேஸ்வரர் கோவில் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் குறித்து சென்னையை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களை கேட்டிருந்தார். அதற்கு ஹிந்து அறநிலையத்துறை திருநெல்வேலி உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது.


கோயிலில் நித்திய பூஜை நடக்கிறதா, பூஜாரிக்கு எவ்வளவு சம்பளம், அவரது பெயர் ,கடைசியாக நடைபெற்ற திருப்பணி, அசையா சொத்துக்களின் விபரங்களும் கேட்கப்பட்டிருந்தது. அசையா சொத்துக்கள் இருப்பது உண்மை என கூறும் அதிகாரி சொத்துக்கள் மூலம் கோயிலுக்கு மாத வருமானம் வருகிறதா என்றால் தகவல் இல்லை என தெரிவித்துள்ளார்.


மேலும் சொத்துக்கள் குத்தகைக்கு யாருக்கு விடப்பட்டுள்ளது யார் பராமரிக்கிறார் என்ற கேள்வி தான் முக்கியமானதாகும். அந்த கேள்விக்கு அதிகாரி 'ஆம்... உயிர் உடைமைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பொது நலன் கருதி இந்த கோயிலின் சொத்துக்களை பராமரிக்கும் குத்தகைதாரர்கள் விபரம் வழங்க இயலாது' என பொது தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோயில் சொத்துக்களை பராமரிப்பவர் குறித்து பயத்துடன் தெரிவிப்பதால் அதிலிருந்து எந்த வருமானமும் வரவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் குத்தகைதாரரிடம் இருந்து எந்த வருமானமும் வராத நிலையில் அந்த நிலங்களை, சொத்துக்களை மீட்பது குறித்தும் ஹிந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement