இலங்கையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை மீட்பதில் ஆர்வமில்லை

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் தண்டனை கைதியாக உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை மீட்க மத்திய அரசு முன்வரவில்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

2024--25ல் ராமேஸ்வரம், பாம்பன்,புதுக்கோட்டை, நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து படகின் டிரைவர்கள், உரிமையாளர்கள், 2வது தடவை கைதானவர்கள் என 60 பேரை தவிர மற்ற மீனவர்களை விடுவித்தனர்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் வவுனியா, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 29 பேருக்கு தலா ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை நீதிமன்றம் விதித்த அபராதத்தை மீனவர் குடும்பத்தினர் செலுத்தியதால் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் 25 மீனவர்கள் நேற்றிரவு கொழும்பில் இருந்து விமான மூலம் சென்னை வந்தனர். மற்ற 4 பேரும் ஓரிரு நாட்களில் வருவதாக மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறுகையில், ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் 6 மாதம் முதல் ஓராண்டு வரை தண்டனை அனுபவிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை மீட்க பணம் இல்லை. இவர்களை மீட்க மத்திய அரசு முன்வராமல் பாராமுகமாக உள்ளது வேதனைக்குரியது என்றார்.

Advertisement